வெள்ளி, 15 டிசம்பர், 2017

மாமன்னர் ஒண்டிவீரன்

                  மாமன்னன் ஒண்டிவீரன் பகடை                                                                                        ஒப்பில்லா மன்னன் ஒண்டிவீரனின்  இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது பிரித்தானிய எதிர்ப்புக்கான போராட்டக் களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம்தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல எனக்குக் கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு. கி.பி. 1857இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது. தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

 ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சனநாயகச் சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம்தான் அறியச் செய்ய வேண்;டும். 

 இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள 'நெற்கட்டும் செவ்வல் கிராமமும்' அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே 'நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்'. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது. விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலிலிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச் சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக் கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் புலித்தேவன.; அவருக்குத் தலைமைப் படைத் தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர்தான் ஒண்டிவீரன். வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு ஒண்டிவீரனும், புலித்தேவனும். எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப்பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். 

மூன்று முறை தோற்று ஒடிய ஆங்கிலேயத் தளபதிகள் ஹெரான், ய+சுப்கான், மாப+ஸ்கான் போன்றோர் மிகப் பெரிய படைபலத்தோடு கி.பி.1767இல் நெற்கட்டும் செவ்வயலைத் தாக்கிய போது புலித்தேவன், சங்கரன்கோவிலில் உள்ள ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்தார். ஒண்டிவீரன் தன் மக்களோடும், புலித்தேவனின் வாரிசுகளோடும் பாளையத்தி லிருந்து வெளியேறி அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார். இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த புலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க் கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத்தான் சோதியானதாகக் குறிப்பிடுவார்கள். (உதாரணமாக நந்தனார் வரலாறு) 

 தலைவனை இழந்த பாளையத்து மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்று அடுத்த கட்டத் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் காத்திருந்தார் ஒண்டிவீரன். அப்போது ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.” இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார். யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (ப+ட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல அமாவாசைக் கும்மிருட்டைத் தேர்வு செய்தார். முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி அமைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்;ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்;கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் படுத்துப் புற்களைத் தன்மேல் பரப்பி ஒளிந்து கொண்டார். இருட்டில் யாரெனக் கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்குப் பக்கத்திலேயே ஒரு ஈட்டியை அறைந்து, அதில் குதிரையைக் கட்டி விட்டுச் சென்றனர் குதிரை வீரர்கள். ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஒண்டிவீரன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு காடியிலேயே படுத்துக் கிடந்தார் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன் கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீண்டும் குதிரை கணைத்து விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து தான் இடுப்பில் செருகியிருந்த பட்டத்து வாளால் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு மேலெழுகிறார். குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். 

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர். விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களும் உண்டு. அதே நேரத்தில் பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்த வீரர்களும் உண்டு. இதில் இரண்டாவது வகையின் முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன். கையை இழந்து விட்டாயே என்று கதறிய குடும்பத்தினரிடமும் பாளையத்து மக்களிடமும் - 'இந்தக் கை போனால் என்ன? எனக்குத் தங்கக் கை கொடுப்பீர்கள் நீங்கள்" என நம்பிக்கை ஊட்டியவர் ஒண்டிவீரன். தாய் மண்ணை மீட்டெடுக்கக் கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என சூளுரைத்தார் ஒண்டிவீரன். 

புலித்தேவன் கி.பி. 1767இல் மறைந்த பிறகும் 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்ததாகச் சொல்லப் படுகிறது. அண்ணன்... எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பது ஒரு தமிழ் வழக்காறு. புலித்தேவன் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் புலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும்............ போராட்டத்தைத்.............; தொடர்ந்த நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை புலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் புலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள். தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்கு அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவனும் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர்.

 தமிழர்களின் வீரம் - 

 தமிழர்களின் விவேகம்-

  தமிழர்களின் போர்த் தந்திரம்-

  ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலமாகவும் இனி முன்னெடுத்துச் செல்லப்படும். 

 -:நன்றி:- கு.ஐக்கையன்

குயிலி மாதாரி

                          குயிலி மாதாரி
                                                                                                                                                                                                                                                                            
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே.
நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளி களுக்கென தனிப் பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில் தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. செர்மனிக்கும் சப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் சப்பானிய வீரர்களின் தற்கொடைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறு வதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொடைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த ஈகத்துக்குரிய வீரமங்கை யின் பெயர் குயிலி. அவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சேரியில் பிறந்தவர் என்பதாலும் வரலாற்றின் பக்கங்களில் வஞ்சிக்கப்பட்டிருக் கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.                                                                                                                                                                                                                                                                             
குயிலியின் பின்னணி
        ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்புப் போராட்டத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரனார் போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கைச் சீமையின் இராணி வேலு நாச்சியார் மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் காலத்தால் அழிக்க முடியாதவை. 1750 காலகட்டத்தில் ஏறக்குறைய பூலித்தேவரும் ஒண்டிவீரரும் நெல்லைச் சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிவகங்கைச் சீமையில் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் ஆங்கிலேயரையும் அவர்களது கூட்டாளியான ஆற்காடு நவாப்புகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சூழ்ச்சியால் முத்துவடுகநாதர் எதிரிகளால் கொல்லப்படு கிறார். உடன் அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகிறார். இந்நிலையில் இழந்த நாட்டை மீட்டெடுக்க முத்துவடுகநாதரின் முதல் மனைவியான இராணி வேலுநாச்சியார் சபதமேற்கிறார். அதற்காக, திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்திவந்த ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் மற்றும் விருப்பாச்சி கோபால் நாயக்கர் ஆகியோரின் உறுதுணையோடு 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பெரும் படையைக் கட்டமைத்து சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார். வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி.                                                                                                                   

                                                                                                                                                                                 
             குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார்.  உடையாள் என்பவள் ஒரு பறையர் குல சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப் பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்?வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.
அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவு களையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக் கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு மனுதர்ம நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ''எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள். இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற் காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர் களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் கிஞ்சித்தும் பெறாத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக் கிறாள்.
''சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத் திருக்கிறாளே?
உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.''
வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.
                                                                                                                           
                                                                                                                                                                                 நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான்.                                                                                                                                                              சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார்.
வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.
அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது.
என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான்.வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

நன்றி:- கு.ஜக்கையன்
                                                                                                                                                          அருந்ததியர் வீரத்தாய் குயிலியை பற்றிய தேவர் மலர் இதழில் வெளிவந்த கட்டுரை